கன்னியாகுமரியில் வாலிபர் கொலை:100 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் துப்பு துலங்கவில்லை
கன்னியாகுமரியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் துப்பு துலங்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் துப்பு துலங்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.
வாலிபர் கொலை
கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் உள்ள ரெயில்வே பாலத்திற்கு கீழ் கடந்த 16-ந் தேதி 35 வயதுடைய வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், சுரேஷ் மற்றும் சரவணகுமார் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
எனினும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. மேலும் கொலையாளிகள் பற்றியும், எதற்காக கொலை நடந்தது என்பது பற்றியும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.
100 கண்காணிப்பு கேமராக்கள்
இந்த நிலையில் பிணமாக கிடந்த வாலிபரின் சட்டை பையில் இருந்த பஸ் டிக்கெட்டை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த பஸ் டிக்கெட் வடசேரியில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்கான பஸ் டிக்கெட் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையானவர் பற்றிய காட்சிகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்று தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொலை நடப்பதற்கு முன்பு காலையில் அந்த நபர் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கேரளா பஸ்சில் ஏறும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து கொலையானவர் எங்கு இறங்குகிறார் என்பதை கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். இதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் பஸ் நிலையம் வரை 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கொலை செய்யப்பட்ட நபர் வேறு எந்த கண்காணிப்பு கேமராக்களிலும் சிக்கவில்லை.
போலீசார் திணறல்
அதோடு அவர் திருவனந்தபுரம் பஸ் நிலையத்திலும் இறங்கவில்லை என்பதும் தெரியவந்தது. எனவே பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் கொலையான நபர் இறங்கி இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு கன்னியாகுமரிக்கு வந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் நடந்து 8 நாட்கள் ஆகியும் கொலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
எனவே கொலையானவர் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story