ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை
பந்தநல்லூர் அருகே ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பனந்தாள்:-
பந்தநல்லூர் அருகே ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட்டல் தொழிலாளி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பிச்சிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா(வயது 42). இவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி அனிதா(35) இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளை அடுத்த பந்தநல்லூர் அருகே உள்ள நெய்வாசல் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
பிரிந்து வாழ்ந்தனர்
இவர்களுக்கு அனுஹாசினி(10) என்ற மகளும், நிரஞ்சன்(7) என்ற மகனும் உள்ளனர் இருவரும் நெய்வாசலில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். அனிதா தனது இரு குழந்தைகளுடன் தனது தாய் வீடான நெய்வாசல் கீழத்தெருவுக்கு வந்து வசித்து வருகிறார்.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் காலையில் இளையராஜா தனது மனைவியை பார்ப்பதற்காக நெய்வாசல் வந்து இருந்தார். அப்போது கணவன்-மனைவி இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டனர். இதனையடுத்து மனைவி அனிதா வீட்டிலேயே இளையராஜா தங்கினார்.
அன்று மாலையில் இளையராஜா வெளியில் சென்று விட்டு வருவதாக அனிதாவிடம் கூறி விட்டு சென்றார். இரவு வரையில் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அனிதா தனது கணவர் மாயமானது குறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் கொல்லைப்புறத்தில் இளையராஜா பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. அதைப்பார்த்து அனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பந்தநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அனிதாவின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட இளையராஜாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story