சொத்து தகராறில் தாயை கொலை செய்த தொழிலாளி கைது


சொத்து தகராறில் தாயை கொலை செய்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 25 Feb 2022 8:51 PM IST (Updated: 25 Feb 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் சொத்து தகராறில் தாயை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி, பிப்.26-
மன்னார்குடியில் சொத்து தகராறில் தாயை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். 
போலீசில் புகார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ராஜகோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 64). இவரது மனைவி பாப்பா(58). இவர்களுக்கு ராஜ்கண்ணன்(43), இளையராஜா(40), இளவரசு(37) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கூலி தொழிலாளர்களான இவர்கள் 3 ேபருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 
பாலகிருஷ்ணனும், பாப்பாவும் தனது மூன்றாவது மகன் இளவரசு வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் மூத்த மகன் ராஜ்கண்ணன், இரண்டாவது மகன் இளையராஜா ஆகியோர் சொத்தில் பங்கு கேட்டு தாய்-தந்தையிடம் தகராறு செய்து வந்தனர். இதுகுறித்து பாப்பா கடந்த 22-ந் தேதி தலையாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். 
அதில், ராஜ்கண்ணன், இளையராஜா ஆகியோர் சொத்து கேட்டு தன்னையும், தனது கணவரையும் மிரட்டி தகராறு செய்வதாக கூறியிருந்தார். இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்கண்ணனை கைது செய்தனர். தலைமறைவான இளையராஜாவை தேடிவந்தனர். 
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை இளையராஜா, தனது தம்பி இளவரசு வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த தாய்-தந்தையிடம் ஏன் போலீசில் புகார் கொடுத்தீர்கள்? என கேட்டு இ்ளையராஜா தகராறு செய்துள்ளார். 
தாய் கொலை 
மேலும் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்த இளையராஜா தான் மறைத்து  வைத்திருந்த அரிவாளால் தன்னை பெற்றவர்கள் என்றும் பாராது தாய்-தந்தையை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பா பரிதாபமாக இறந்தார். பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
தொழிலாளி கைது 
இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று தலைமறைவாக இருந்த இளையராஜாவை போலீசார் கைது செய்தனர். 
---


Next Story