பட்டாசு ஆலை வெடி விபத்து; 4 பேர் மீது வழக்கு
கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானதையொட்டி ஆலை உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அங்கு வேலை செய்த ஈராட்சியை சேர்ந்த ராமர் (வயது 59), தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (52), குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த மாடமுத்து என்ற கண்ணன் (48) ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்களை தீயணைப்பு துறையிரும், போலீசாரும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா ஆகியோர் தலைமையில், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பட்டாசு ஆலை நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது, உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கவும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாகவும் பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் கிடைக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்கள் பெற்று சென்றனர்.
இதற்கிடையே, இந்த வெடி விபத்து தொடர்பாக துறையூர் கிராம நிர்வாக அலுவலர் அந்தோணிசெல்வி கொப்பம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் பட்டாசு ஆலையை நடத்தி வரும் பிரபாகரன், மேலாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர்கள் திருநாவுக்கரசு, சூசை மிக்கேல் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story