வியாபாரிகள் கடை அடைப்பு- சாலை மறியல்


வியாபாரிகள் கடை அடைப்பு- சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Feb 2022 11:32 PM IST (Updated: 25 Feb 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் கடை அடைப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்: 

கொலை மிரட்டல் 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் மந்தை விநாயகர் கோவில் முன்பு கடந்த 20-ந்தேதி இரவு எலப்பார்பட்டியை சேர்ந்த பொன்னுரங்கன், குட்டி சின்னச்சாமி, சந்துரு உள்ளிட்ட 7 பேர் திடீரென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு உள்ள கடைகளை அடித்து நொறுக்கி விடுவோம் என்று வியாபாரிகளிடம் கூறினர். 

இதை தட்டிக் கேட்ட எரியோட்டை சேர்ந்த நாடார் உறவின்முறை முன்னேற்ற சங்க பொறுப்பாளரும், அரசு ஒப்பந்ததாரருமான பழனிசாமிக்கு (வயது 43) கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எரியோடு போலீசில் பழனிசாமி புகார் செய்தார். அதன்பேரில் பொன்னுரங்கன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அரிவாள் வெட்டு 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எரியோடு மந்தை விநாயகர் கோவில் முன்பு பழனிசாமி மற்றும் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பொன்னுரங்கன் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் பழனிசாமியை வெட்ட முயன்றது. உடனே அவர் தடுத்தபோது இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள  கடைகளின் கதவு மற்றும் ஜன்னல்களை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த பழனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சாலை மறியல் 
இதைத்தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி எரியோட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்  நேற்று முன்தினம் இரவு பஸ் நிலையம் அருகே திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்- கரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தகவலறிந்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழனிசாமியை தாக்கி அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். 

கடையடைப்பு போராட்டம்
இந்த நிலையில் பழனிசாமியை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி எரியோடு வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து எரியோடு போலீஸ் நிலையத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். 

இதற்கிடையே பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை தாக்கியவர்களை வலைவீசி தேடி வருகிறார். வியாபாரிகள் கடை அடைப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story