கள்ளக்குறிச்சியில் பொதுமாறுதல் கலந்தாய்வை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் பொதுமாறுதல் கலந்தாய்வை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 23-ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், கடந்த 2019-ல் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
நேற்று முன்தினம் நிரவல் காலி பணியிடங்கள் காண்பிக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று காலை பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாலை 6 மணி அளவில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
காத்திருப்பு போராட்டம்
அப்போது அங்கு வந்த ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள், கடந்த 23-ந் தேதி நடந்த கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில் கூடுதல் காலிப்பணியிடங்களை காட்டி, அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே கலந்தாய்வு நடத்த வேண்டும் எனக்கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது நடைபெற உள்ள கலந்தாய்வை நிறுத்தி வைப்பதாக கூறினார். மேலும் 23-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வு சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story