அ.தி.மு.க.-தி.மு.க.வை தவிர மாற்று கட்சிகள் தமிழகத்தை ஆள நினைப்பது கனவாகவே முடியும்-செல்லூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க.-தி.மு.க.வை தவிர மாற்று கட்சிகள் தமிழகத்தை ஆளநினைப்பது கனவாகவே முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
அ.தி.மு.க.-தி.மு.க.வை தவிர மாற்று கட்சிகள் தமிழகத்தை ஆளநினைப்பது கனவாகவே முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இது குறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் வெறுப்பு
மதுரை மக்களுக்காக பல்வேறு பணிகளை நிறைவேற்றி இருந்தாலும், தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மதுரையில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி இருக்கிறோம். அதில் சில பணிகள் முடிந்து விட்டன. சில பணிகள் நடந்து வருகின்றன. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. ஆளும் தி.மு.க. மீது வெறுப்பு காரணமாக மக்கள் வாக்களிக்க வரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றாததால் மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் தி.மு.க. வென்றதற்கு காரணம். இந்த தேர்தலில் நாங்கள் தனித்து நின்று இருக்கிறோம்.
தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறோம். எங்களுடைய வாக்கு வங்கி குறையவில்லை.அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து நாங்கள் அனைவரும் கூடி ஆலோசனை நடத்துவோம்.
பா.ஜனதா கட்சி
அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்துவிடும் என அமைச்சர் பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அவர் காண்பது பகல் கனவு. அ.தி.மு.க.வில் வேண்டுமானால் தி.மு.க. இணையலாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் மக்களின் நிலைப்பாடு மாறும். அது போல் இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கலாம். வருகிற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். திராவிட இயக்கங்கள்தான் என்றைக்குமே தமிழகத்தை ஆளும். அதற்கு காரணம் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான்.
தி.மு.க., அ.தி.மு.க.தான் தமிழகத்தை ஆட்சி செய்யும். அதனை ஆணித்தரமாக சொல்கிறேன். தமிழகத்தில் திராவிட கட்சிகள் வலுவாக ஊன்றி இருக்கின்றன. எனவே மாற்று கட்சியினர் தமிழகத்தை ஆட்சி செய்யலாம் என்று நினைப்பது கனவாகவே முடியும். அது ஒருபோதும் நடக்காது. பா.ஜனதா 3-வது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம் அது வளரும் கட்சி. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story