‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் பாண்டிய வேளாளர் தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த சாலையானது மூடப்படாமல் உள்ளது. இதனால் குண்டும், குழியுமான சாலையில் குடிநீருக்காக போடப்பட்ட குழாய்கள் உடைந்து குடிநீர் சாலையில் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள குடிநீர் குழாயை சரிசெய்து சாலையை சீரமைப்பார்களா?
தாமஸ், எல்லீஸ் நகர்.
தேங்கிய குப்பை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கிருஷ்ணன் கோவில் அருகே சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு குவியலாக தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். தேங்கியுள்ள குப்பையில் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளதால் தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வத்திராயிருப்பு.
அறிவிப்பு பலகை தமிழில் தேவை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இயங்கும் ஸ்பீடு போஸ்ட், பார்சல் போன்ற சேவைகளின் அறிவிப்பு பலகைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் தபால் சேவையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே தமிழிலும் அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
சுகாதார சீர்ேகடு
மதுரை நேதாஜி ரோடு மேல பாண்டியன் அகில் தெருவில் சாக்கடை கழிவுகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவ உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, காஜிமார் தோப்பு.
தெருவிளக்கு வசதி
மதுரை குரு தியேட்டர் சிக்னல்-காளவாசல் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இரவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைத்து தருவதுடன், தேவையான இடங்களில் வேகத்தடையும் அமைத்தால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.
கருப்பசாமி, செல்லூர்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தினமும் எண்ணற்ற பக்தர்கள் சாத்தூர் வழியாக செல்வது வழக்கம். இந்தநிலையில் சாத்தூர் ரெயில்வே நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உள்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். அவசர தேவைக்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை இயக்க முடிவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனிக்கப்பார்களா?
ராதாகிருஷ்ணன், ஆலங்குளம்.
Related Tags :
Next Story