சேலம் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்


சேலம் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2022 3:06 AM IST (Updated: 26 Feb 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம், 
முற்றுகை போராட்டம்
தமிழக போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 76 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும், பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். முழுமையான மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
போக்குவரத்து பாதிப்பு
போராட்டத்தின் போது பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட 750 பேர் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு அஸ்தம்பட்டி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது. மேலும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் அங்கு தொடர்ந்து மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து அவர்களிடம் போக்குவரத்து உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், உங்களுடைய கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story