கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மொட்டைக்கோபுரம் பகுதியில் கடந்த 2-ந்தேதி கஞ்சா விற்பனை செய்ததாக பாக்கியநாதன்விளையைச் சேர்ந்த செல்வபதி (வயது 47), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்ற தோக்கா ஷாஜகான் (43), தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய 3 பேரை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூக்கு பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்று, கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட செல்வபதி, ஷாஜகான், ரமேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.
இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேர், போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் உள்பட 39 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story