அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசிப் பெருவிழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசிப் பெருவிழா முன்னேற்பாடு குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் மோகன் கலந்து கொண்டனர்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மாசிப்பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி விழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் மேல்மலையனூர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத், அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், தாசில்தார் கோவர்த்தனன், ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர் ராமு வரவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை கூறினார்.
ஆலோசனை
விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும், குப்பைகளை அவ்வப்போது அகற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் தயார் நிலையில் இருக்க வேண்டும், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும், அரசு போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும், தற்காலிக பஸ் நிலையங்களில் மட்டுமே பஸ்கள் நிற்க வேண்டும், சுகாதாரத்துறையினர் போதுமான மருந்து மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டன.
கூட்டத்தில், விழுப்புரம் உதவி ஆணையர் ஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story