உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி


உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி
x
தினத்தந்தி 26 Feb 2022 8:01 PM IST (Updated: 26 Feb 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவியை விரைவாக மீட்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி

ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவியை விரைவாக மீட்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மருத்துவ மாணவி

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் சாயிநாத். இவருடைய மனைவி யுகேஸ்வரி. இவர்களது மகள் சாயி சோனு(வயது 21). உக்ரைன் நாட்டில் வின்னிஸ்டியா மாவட்டத்தில் பிரோகோவ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. இதன் காரணமாக பிரோகோவ் மருத்துவ பல்கலைக்கழகம் மூடப்பட்டு இருக்கிறது. மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அங்கு படித்து வரும் சாயி சோனு உள்பட இந்திய மாணவ-மாணவிகள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 

நம்பிக்கையுடன் இருக்கிறோம்

இது தவிர உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், பாதாள அறைகளில் பதுங்கி உள்ளனர். இதுகுறித்து மாணவி சாயி சோனு தனது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். மேலும் தங்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் தற்போதைக்கு போதிய அளவு உள்ளதாகவும், மத்திய-மாநில அரசுகள் மீட்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளதால் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பாக அவரது பெற்றோர் கூறும்போது, உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் எங்களது மகள் உள்பட இந்திய மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்தது. எனினும் காலம் தாழ்த்தாமல் விரைவாக அனைத்து மாணவ-மாணவிகளையும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.


Next Story