பறிக்காமல் செடிகளில் பழுத்து குலுங்கும் தக்காளி


பறிக்காமல் செடிகளில் பழுத்து குலுங்கும் தக்காளி
x
தினத்தந்தி 26 Feb 2022 9:19 PM IST (Updated: 26 Feb 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

பறிக்காமல் செடிகளில் பழுத்து குலுங்கும் தக்காளி

பல்லடம், 
விலை குறைந்து போனதால் பறிக்காமல் செடிகளில்  தக்காளி பழங்கள் பழுத்து குலுங்குகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி சாகுபடி
சமையலின் தனித்துவம் தக்காளி. சமையல் அறையில் நீக்கமற நிறைந்து இருப்பது இதுவே. ஆனால் இதன் விலை குறையும் போது இல்லத்தரசிகள் கொண்டாடுவர்கள். விவசாயிகள் திண்டாடுவார்கள். இதனால் விலை உயரும்போதும், குறையும் போதும் மிப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1000  வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர். கடந்த கார்த்திகை மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
 இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படுவதால் விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிடுகின்றனர்.
இதுகுறித்து தக்காளி விவசாயி ஒருவர் கூறியதாவது:-
கோரிக்கை
விளைச்சல் அதிகமாக உள்ளதால் 14 கிலோ தக்காளி கொண்ட பெட்டி ரூ.30-க்கு விற்பனையாகிறது. இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக்கூட திரும்ப எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக மழைப்பொழிவால் தக்காளி விளைச்சல் குறைந்தது. தற்போது தக்காளி நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்படுகிறது. உரிய விலை இல்லாததாலும், தக்காளி பறிப்பதற்கு கொடுக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாகாது என்பதால் விவசாயிகள் பலர் செடியிலேயே தக்காளியை விட்டு விடுகின்றனர். இதனால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தக்காளி வரத்து அதிகரிக்கும் போது அவற்றை இருப்பு வைக்கும் வகையில் பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மேலும் தக்காளியை ‘சாஸ்’ உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு நிலையங்களை அமைத்து தக்காளி விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பற்றவேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story