தேனி அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
தேனி அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது.
தேனி:
தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் தேனி மேனகா மில்ஸ் சார்பில் தேனி அருகே தப்புக்குண்டுவில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது.
இதற்கு தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லஷ்மண் நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போட்டி 30 ஓவர்கள் போட்டியாக நடத்தப்படுகிறது.
முதல் ஆட்டத்தில் திருப்பூர் எலிவன்ஸ் கிரிக்கெட் சங்க அணியும், சென்னை டேக் சொலியூசன்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் சென்னை அணி 30 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர் சத்ருவேதி 120 ரன்கள் குவித்தார். அதைத்தொடர்ந்து விளையாடிய திருப்பூர் அணி 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதனால், 186 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. தினமும் 2 போட்டிகள் வீதம் நடக்கின்றன. வருகிற 4-ந்தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.
Related Tags :
Next Story