தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்
தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலை எதிரொலியாக தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாலதண்டாயுதநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் தாளமுத்துநகரில் தையல் கடை நடத்தி வந்தார். மேலும் தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை ேதடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி வியாபாரிகள் மற்றும் கண்ணனின் உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளும் அடைக்கப்பட்டன. இதையடுத்து கண்ணன் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜெயேந்திரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர்கள் பெண்களை கேலி செய்ததாக கண்ணன் ஏற்கனவே 2 முறை தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாகவும், அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்த நிலையில் அவர்கள் கண்ணனை கொைல செய்துள்ளதாக குற்றம்சாட்டி வியாபாரிகள், அப்பகுதி மக்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்த இருந்தனர்.
இந்த நிலையில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து நேற்று வியாபாரிகள், பொதுமக்கள் நடத்த இருந்த போராட்டத்தை கைவிட்டனர்.
தி.மு.க. பிரமுகர் கொலை எதிரொலியாக சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story