திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.3 கோடியை தாண்டியது


திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.3 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 26 Feb 2022 9:53 PM IST (Updated: 26 Feb 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3 கோடியை தாண்டியது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏற்கனவே கடந்த 2, 11 ஆகிய தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. தொடர்ந்து 3-வது முறையாக நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியானது கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் நடந்தது.

கோவில் நிரந்தர உண்டியல்கள் மூலம் 3 நாட்களும் சேர்த்து ரூ.2 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 389-ம், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 496-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.5 ஆயிரத்து 233-ம், கோவில் அன்னதான உண்டியலில் ரூ.18 லட்சத்து 60 ஆயிரத்து 290-ம், சிவன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.17 ஆயிரத்து 956-ம், நாசரேத் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.1,257-ம், குலசேகரன்பட்டினம் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.2 ஆயிரத்து 654-ம் ஆக மொத்தம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 275 காணிக்கையாக கிடைத்தது. மேலும் தங்கம் 2 கிலோ 284 கிராமும், வெள்ளி 26 கிலோ 517 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 132-ம் கிடைத்தது. இந்த கோவிலில் முதன் முறையாக உண்டியல் வருமானம் ரூ.3 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் வெங்கடேஷ், ரோஜாலி சுமதா, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, இசக்கிசெல்வம், சிவலோகநாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி, மோகன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர், கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.

Next Story