போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ சொட்டு மருந்து முகாம்
ராமநாதபுரம்
5 வயதுக்கு உட்பட்ட 1.16 லட்சம் குழந்தைகளுக்கு 1,260 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ நோயை முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) கூடுதலாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 1,16,838 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். குறிப்பாக வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல், இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்புப் பகுதி குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும்.
பணியாளர்கள்
இந்த சொட்டு மருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் என1,260 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். இந்த சொட்டு மருந்து பணியை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை தவிர்த்து சுகாதார துறை மூலமாக 12 மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 139 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பணியில் சுகாதார துறை மூலமாக 637 பணியாளர்களும், சத்துணவு துறை மூலமாக 1,668 பணியாளர்களும், 109 பள்ளி மாணவர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக 2,545 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும் இன்று நடைபெறவுள்ள சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story