தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டம் கலெக்டரின் முயற்சியால் சாகுபடி பரப்பளவு 60 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது


தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டம் கலெக்டரின் முயற்சியால் சாகுபடி பரப்பளவு 60 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது
x
தினத்தந்தி 27 Feb 2022 1:18 AM IST (Updated: 27 Feb 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முயற்சியால் சாகுபடி பரப்பளவு 60 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்:-

தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் முயற்சியால் சாகுபடி பரப்பளவு 60 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 

நெல் சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் நெற்பயிர் சாதாரணமாக 4.5 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 915 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இதில் குறிப்பாக குறுவை பருவத்தில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த 48 ஆண்டுகளுக்குப்பிறகு அதிகபட்ச சாகுபடியாகும்.
இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அறுவடையை தொடர்ந்து உளுந்து சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. இதில் குறிப்பிட்ட இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டாலும், மீதமுள்ள இடங்கள் தரிசாக போடப்பட்டது.

தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டம்

இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், “தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தார். அதன்படி உளுந்து சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சம்பா, தாளடி அறுவடை ஆன பின்னர் “தஞ்சை நஞ்சையில் உளுந்து” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மண் வளம் பாதுகாத்திடவும், பயிர் சுழற்சி செயல்படுத்திடவும், மண்ணில் தழை சத்து நிலை நிறுத்தப்பட்டு மண்வளம் அதிகரித்திடவும் இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழக்கமான சாகுபடி பரப்பளவை விட கூடுதலாக 37 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

60 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி

இதற்காக விவசாயிகளுக்கு விதை மானியம், மற்றும் நுண்ணுயிர்சத்து உரங்கள் வழங்கப்பட்டன. மேலும் சாகுபடி தொழில்நுட்பங்கள் அடங்கிய புத்தகம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. வட்டார அளவில் இலக்கு பிரித்தளிக்கப்பட்டு அதில் வாய்ப்புள்ள கிராமங்கள் கண்டறியப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா திருவிடைமருதூரில் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். 585 கிராமங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் பயனாக இந்த ஆண்டு தற்போது வரை 60 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் உளுந்து மற்றும் பயறு வகை பயிர்கள் தஞ்சை மாவட்டத்தில் கலெக்டரின் முயற்சியால் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டு இருப்பது விவசாயிகள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

20 ஆயிரம் டன்

இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையினால் தற்போது பயிர் நிலை நன்றாக உள்ளது. இந்த 60 ஆயிரம் ஏக்கரில் இருந்து 20 ஆயிரம் டன் உளுந்து உற்பத்தியாகும் எனவும் இதன் மதிப்பு இன்றைய சந்தை விலையில் ரூ.140 கோடி ஆகும். இது கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story