வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை
தஞ்சை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை மார்ச் 1-ந் தேதி கடைசி நாள் ஆகும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை மார்ச் 1-ந் தேதி கடைசி நாள் ஆகும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.
வேலை வாய்ப்பு பதிவு
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை ஏற்கெனவே புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளது.
அதாவது 2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் அவர்களது பதிவை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 1-1-2014 முதல் 31-12-2019 வரை இருக்குமாயின் அந்த பதிவுதாரர்களுக்கு இந்த சிறப்பு புதுப்பித்தல் சலுகை பொருந்தும்.
மார்ச் 1-ந் தேதி கடைசி நாள்
இச்சலுகையை பெறவிரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 2-12-2021 முதல் 3 மாதங்களுக்குள் இணையம் வாயிலாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற மார்ச் 1-ந்தேதிக்குள் பதிவுதாரர்கள் தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத தஞ்சை மாவட்ட பதிவுதாரர்கள் வருகிற 1-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தங்கள் விண்ணப்பம் கிடைக்கப்பெறும் வகையில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ அல்லது 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story