2 மகள்களை கொன்று பெண் தற்கொலை


2 மகள்களை கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2022 2:44 AM IST (Updated: 27 Feb 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

குடித்துவிட்டு வந்து கணவர் தகராறு செய்ததால் 2 மகள்களை கொன்றுவிட்டு பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் துமகூரு அருகே நடந்துள்ளது.

துமகூரு:

குடித்துவிட்டு வந்து தகராறு

  துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா உப்பாரஹள்ளி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி புஜ்ஜிபாய்(வயது 35). இந்த தம்பதிக்கு குஷி(வயது 9), ஹர்ஷிதா(6) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கூலி தொழிலாளியான வெங்கடேஷ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், புஜ்ஜிபாயிடம் தகராறு செய்ததுடன் அவரை சரமாரியாக அடித்து, உதைத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த புஜ்ஜிபாய் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

தற்கொலை

  அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது மகள்களை வீட்டில் இருந்து அழைத்து கொண்டு சென்ற புஜ்ஜிபாய், கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் மகள்களை பிடித்து தள்ளி கொன்றார். பின்னர் தானும் அந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இதுபற்றி அறிந்த திருமணி போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகள்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story