குமரியில் தேன் சீசன் தொடங்கியது
குமரி மாவட்டத்தில் தேன் சீசன் தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து தேன் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் தேன் சீசன் தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து தேன் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தேன்
தமிழகத்தில் தேன் உற்பத்தியில் குமரி மாவட்டம் முதன்மையில் உள்ளது. அதிலும் மார்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு, குழித்துறை, காப்புக்காடு, அருமனை, முழுக்கோடு, மஞ்சாலுமூடு, குலசேகரம், களியல், சேக்கல், பிணந்தோடு, திருவட்டார், மாத்தூர், மலைவிளை, கொட்டூர், பொன்மனை, பேச்சிப்பாறை பகுதிகளில் தேனீ வளர்ப்போரும், தொழிலாளர்களும் உள்ளனர்.
இவர்கள் குமரி மாவட்டத்தில் ரப்பர் மரக்காடுகளில் மரத்தால் செய்யப்பட்ட தேன்பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி செய்கின்றனர்.
பொதுவாக காடுகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஏற்படும் குளிர்கால இலையுதிர்வுக்கு பின்னர் மரங்களில் புதிய தளிர் இலைகளும், அதனைத் தொடர்ந்து பூக்களும் உருவாகும், அதில் உள்ள தேனை தேனீக்கள் எடுத்து வந்து பெட்டிகளில் சேகரிக்கும். எனவே பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களே தேன் சீசன் காலங்களாகும்.
சீசன் தொடங்கியது
அதன்படி தற்போது குமரி மாவட்டத்தில் தேன் சீசன் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து தேனீ வளர்ப்போர் மற்றும் தொழிலாளர்கள் என 5 ஆயிரம் பேர் தேன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியைச் சேர்ந்த தேனீ வளர்ப்பவர் தோமஸ் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தேன் சீசன் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்த்து பணிகளை செய்து வருகிறோம். தேனுக்கான அடிப்படை கொள்முதல் விலையை தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்கள் உயர்த்தி வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு மொத்த கொள்முதல் விலையாக கிலோவிற்கு ரூ.130 முதல் ரூ.140 வரை மட்டுமே கிடைத்தது. நடப்பாண்டில் தேனின் கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.200 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story