பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேர் வெள்ளோட்டம்


பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேர் வெள்ளோட்டம்
x

ராஜகோபால சுவாமி கோவில் தேர் வெள்ளோட்டம் நடக்கிறது

நெல்லை:
பாளையங்கோட்டையில் வேதநாராயணன்-அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பெரிய தேர் பழுதடைந்து இருந்ததால் சிறிய தேரில் ராஜகோபாலசாமி வலம் வந்தார். பெரிய தேரை சரிசெய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பாளையங்கோட்டை கோபாலன் கைங்கர்ய சபாவினர், புதிய தேர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அனுமதிபெற்று அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் அமைக்கப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
இதுகுறித்து கோபாலன் கைங்கர்ய சபாவின் தலைவர் கே.ராமகிருஷ்ணன் கூறுகையில், “பக்தர்களின் கோரிக்கையை ஏற்று எங்கள் கோபாலன் கைங்கர்ய சபாவின் மூலம் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர் வெள்ளோட்டம் நாளை மறுநாள் (அதாவது நாளை திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்த கஜேந்திரன் ஸ்தபதி 1½ வருடங்களில் தேர் செய்து கொடுத்துள்ளார். தேர் வெள்ளோட்டத்தில் அரசு அதிகாரிகள், ஆன்மிக பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்” என்றார்.
அப்போது செயலாளர் விநாயகராமன், பொருளாளர் சத்தியமூர்த்தி, துணைத்தலைவர்கள் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், ரங்கநாதன் மற்றும் கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story