உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் பிணம்
சேலத்தில் இருந்து வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேதாரண்யம்:
சேலத்தில் இருந்து வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்ற வந்த லாரியில் டிரைவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பு ஏற்ற வந்த லாரி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் உப்பு ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த நிலையில் உப்பு ஏற்றுவதற்காக சேலத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு வந்த லாரியை சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மணத்தான் நல்லார், கவுண்டன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(வயது40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பின்னர் டிரைவர் செந்தில்குமார் லாரியை நாகை சாலை பகுதியில் நிறுத்தி விட்டு லாரியிலேயே தூங்கியதாக தெரிகிறது.
பிணமாக கிடந்த டிரைவர்
நேற்று முன்தினம் காலையில் உப்பு ஏற்றுவதற்காக அவரை லாரி ஷெட்டில் உள்ளவர்கள் போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்து பார்த்த போது செந்தில்குமார், லாரியில் டிரைவர் இருக்கையில் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது செந்தில்குமார் உயிரிழந்தது தெரியவந்தது.
பரபரப்பு
பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியின் இருக்கையின் அடியில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் குமார் எப்படி இறந்தாா்? அவர் சாவில் மர்மம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்ற வந்த டிரைவர் ஒருவர் லாரியில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த செந்தில்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story