கடலூர், சிதம்பரம் பகுதியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது
கடலூர், சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார்உள்ளிட்ட போலீசார் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திருப்பாதிரிப்புலியூர் இந்திராநகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் முனீஷ் என்கிற முனுசாமி (வயது 26) என்பவர் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை பிடிக்க முயன்ற போது, சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரை அவர் கத்தியால் வெட்டி கொலை செய்ய முன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனுசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 900 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைது
இது தவிர கூத்தப்பாக்கம் பகுதியில் 250 கிராம் கஞ்சா வைத்து விற்பனை செய்த கே.என்.பேட்டை முருகன் மகன் ஸ்ரீதர் (20), திருப்பாதிரிப்புலியூரில் 250 கிராம் கஞ்சா விற்ற தங்கராஜ்நகரை சேர்ந்த ரவி மகன் ராஜேஷ் (19) ஆகிய 2 பேரையும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் டெல்டா போலீசார் சிதம்பரம் தில்லைநகர் பகுதியில் 1¼ கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்த திருவரசன் மகன் மாணிக்கம் என்கிற மாணிக்கவேல் (28), கிள்ளை தெற்கு தெருவில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த மாறன் மகன் கிருபாநிதி (24) ஆகிய 2 பேரையும் பிடித்து, சிதம்பரம், கிள்ளை போலீசில் ஒப்படைத்தனர்.
4 கிலோ கஞ்சா பறிமுதல்
அதன்பேரில், அந்தந்த போலீஸ் நிலையங்களில், அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணிக்கம், கிருபாநிதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 1¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story