புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வினை 3 ஆயிரத்து 523 பேர் எழுதினர்


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வினை 3 ஆயிரத்து 523 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 28 Feb 2022 12:07 AM IST (Updated: 28 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வினை 3 ஆயிரத்து 523 பேர் எழுதினர்.

புதுக்கோட்டை:
ஊரக திறனாய்வு தேர்வு
தமிழகத்தில் கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. கிராமப்புற அரசு பள்ளிகளில், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மாவட்டத்துக்கு 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிளஸ்-2 வகுப்பு முடிக்கும் வரை 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
இத்தேர்விற்கு ஊரக பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021-2022-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர்.
18 மையங்கள்
இந்த ஊரக திறனாய்வு தேர்வானது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், இலுப்பூர், மணமேல்குடி, ஆலங்குடி, விராலிமலை, கீரனூர், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, பொன்னமராவதி, புதுக்கோட்டை உள்பட 18 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுத மொத்தம் 3 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  தேர்வு நடைபெற்றதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூா்த்தி ஆய்வு மேற்கொண்டார். இதேபோல ஆங்காங்கே கல்வி மாவட்ட அதிகாரிகள் மஞ்சுளா, மணிமொழி, ராஜாராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story