வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி


வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 28 Feb 2022 1:34 AM IST (Updated: 28 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டைக்காய் மகசூல் குறைந்த நிலையில், விலையும் கிலோ 5 ரூபாய் என கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துளளனர்.

தேவூர்:-
தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டைக்காய் மகசூல் குறைந்த நிலையில், விலையும் கிலோ 5 ரூபாய் என கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துளளனர்.
வெண்டைக்காய் சாகுபடி
தேவூர் அருகே சென்றாயனூர், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, தண்ணிதாசனூர், செங்கானூர், பூமணியூர், பொன்னம்பாளையம், மேட்டுபாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசன விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். 3 மாத காலத்தில் வெண்டைக்காய்கள் அறுவடை செய்வது வழக்கம்.
இந்த வெண்டைக்காய்களை வியாபாரிகள் தேவூர், அரசிராமணி சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் மையம் அமைத்து வாங்கி செல்கின்றனர். நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து வெண்டைக்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து, கேரள மாநிலத்திற்கு லாரி மற்றும் சரக்கு வேன்களில் அனுப்பி வருகின்றனர்.
மகசூல், விலை வீழ்ச்சி
இந்த நிலையில் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கத்தால் வெண்டைக்காய் செடிகள் வளர்ச்சி குன்றி மகசூல் குறைவாக உள்ளது. கடந்த மாதம் வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. ஆனால் மகசூல் குறைந்த நிலையில், தற்போது வெண்டைக்காய்களின் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. 
தற்போது ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெண்டைக்காய்களை குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளனர். மகசூல் குறைவான நிலையில், விலையும் குறைவாக உள்ளதால் வெண்டைக்காய் சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story