நகராட்சி, பேரூராட்சிகளில் தயாராகும் கூட்டரங்கம்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளதால் அவர்கள் பங்கேற்கும் கூட்டரங்குகள் தயாராகும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்குடி,
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளதால் அவர்கள் பங்கேற்கும் கூட்டரங்குகள் தயாராகும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தயாராகும் கூட்டரங்கு
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதன் பின்னர் கடந்த 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வருகிற 4-ந்தேதி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் தலைவர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை (2-ந்தேதி) அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பதவியேற்க உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய 4 நகராட்சிகளும், திருப்புவனம், நாட்டரசன்கோட்டை, இளையான்குடி, திருப்பத்தூர், நெற்குப்பை, சிங்கம்புணரி, கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், கண்டனூர், புதுவயல் ஆகிய 11 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகளில் மொத்தம் 117 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு நாளை பதவியேற்க உள்ளனர். இதேபோல் 11 பேரூராட்சிகளில் மொத்தம் 168 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களும் நாளை பதவியேற்க உள்ளனர்.
புதிய மேஜை, நாற்காலிகள்
இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ளதால் அவர்கள் பங்கேற்கும் கூட்டரங்குகள் தயாராகும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் கூட்டரங்கில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்து காணப்பட்டன. இவற்றை சரி செய்து புதிய இருக்கைகள், நாற்காலிகள் மற்றும் ஒலி பெருக்கிகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்குடி நகராட்சியில் நேற்று அரங்கை பணியாளர்கள் சுத்தம் செய்து பின்னர் அங்கு நகர்மன்ற தலைவர் அமருவதற்கான சிறப்பு நாற்காலி மற்றும் மேஜைகள் தயார் செய்யும் பணியும், கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் பழுதான மைக் மற்றும் ஒலி பெருக்கிகளை அகற்றி விட்டு புதிய ஒலி பெருக்கியை பொருத்தும் பணியிலும் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story