ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 Feb 2022 10:33 PM IST (Updated: 28 Feb 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்
புகார்பெட்டி 
கரூரில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திங்கட்கிழமைதோறும் நடத்தப்பட்டு வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
அதிகாரப் பரவலாக்கல் மூலமே சிறந்த அரசு நிர்வாகத்தை தரமுடியும் என்பதில் மக்கள் நீதி மய்யம் அசையா நம்பிக்கை வைத்திருக்கிறது. 
ஏரியா சபை, வார்டு கமிட்டி
ஆகவே தான் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அணுகுமுறையோடு உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற கருத்தாக்கத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிராம சுயாட்சிக்கு வழிவகுக்கும் கிராமசபைகள் மேம்பட களத்தில் பணியாற்றும்போது பங்கேற்பு ஜனநாயகத்தின் மகத்துவத்தை கண்கூடாக உணரமுடிகிறது. 
நகர்ப்புறங்களிலும் கிராம சபைகள் போன்ற மக்கள் பங்கேற்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி மலர ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டம்
இதேபோல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 
கரூர் மாவட்டத்தில் புதிதாக மண்மங்கலம் வட்டம் நன்னியூர், மல்லாம்பாளையம், கிருஷ்ணராயபுரம் வட்டம் கள்ளபள்ளி, குளித்தலை வட்டம் கே.கேட்டை ஆகிய 4 இடங்களில் 4.90 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மணல் குவாரி அமைக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய 4 மணல்குவாரிகளும் அமையும் இடத்திற்கு அருகிலேயே 500 மீட்டர் தூரத்தில் ஏற்கனவே மணல் குவாரிகள் செயல்பட்டு மூடப்பட்டுள்ளன. 
புதிய மணல் குவாரிக்கு அருகிலேயே 500 மீட்டர் தூரத்தில் ஏற்கனவே இயங்கி மூடப்பட்ட மணல் குவாரி இருந்திருந்தால், தற்போது அனுமதி கேட்கும் குவாரி மற்றும் மூடப்பட்ட குவாரியின் மொத்த பரப்பளவு 5 ஹெக்டேர் பரப்பளவு இருந்தால் கருத்துக்கேட்பு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும். 
மணல் குவாரிகளை...
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு அடிப்படையில், சட்டவிதியை பின்பற்றாமல் கரூர் மாவட்டத்தில் 4 மணல் குவாரிகளுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. 4 புதிய மணல் குவாரிகளை கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் அமைப்பது என்பது முழுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு எதிரான சட்ட விரோத செயலாகும். கரூர் மாவட்டத்தில் 4 புதிய மணல் குவாரிகளை அமைக்க கூடாது என கோருகிறோம். இவ்வாறு சட்டவிரோதமாக மணல் குவாரி அமைக்கப்படுமாயின் சட்ட ரீதியாகவும், மக்களை திரட்டியும் போராடுவோம் என தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story