தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Feb 2022 11:38 PM IST (Updated: 1 March 2022 12:42 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் அடங்கிய பகுதி

தெரு விளக்குகள் எரியுமா?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி 18-வது வார்டில் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் பழுதாகி உள்ளன. செங்கம் புதிய பஸ் நிலையம், ஜீவானந்தம் தெரு, ராஜவீதி, மேலப்பாளையம், தளவாநாயக்கன்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் பழுதாகி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் தெருவில் நடமாட அச்சப்படுகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகளை எரியவிட வேண்டும்.

  -சிவசந்திரன், செங்கம்.
  

காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் செங்குட்டையில் இருந்து கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் வரை சாலையின் நடுவே உள்ள மின் விளக்குகளில் 20-க்கும் மேற்பட்டவை எரியவில்லை. நீண்டகாலமாக எரியாமல் இருக்கும் மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.
 
 -பி.துரை, கல்புதூர்.

பழுதான சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி கிராமத்துக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. காலணி அணியாமல் சாலையில் நடந்து செல்லவே முடியவில்லை. சாலை நெடுகிலும் கூரிய ஜல்லிக்கற்கள் கால்களை பதம் பார்க்கிறது. இரு சக்கர வாகனங்களும் கல்லடிபட்டு டயர் சேதம் அடைகிறது. பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
-சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி.

சுகாதார வளாகம் சேதம்

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணககான பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். அவசரத்துக்கு கழிப்பிடம் செல்ல அங்கு சுத்தமான சுகாதார வளாகம் இல்லை. இலவச சிறுநீர் கழிப்பிடம் சேதமாகி கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம் இலவச சுகாதார வளாத்தை சீர் செய்ய வேண்டுகிறேன்.
  -ராஜா, ஆம்பூர்.அரக்கோணம்-சேலம் அரசு பஸ் இயக்கப்படுமா?

 ராணிப்பேட்டை தனி மாவட்டமான பிறகு பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. அதேபோல் அரக்கோணம்-சேலம் இடையே ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளூர், திருவண்ணாமலை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்தூர் வழியாக சேலத்துக்கு ஒரு அரசு பஸ் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
 
அ.அப்துல்ரஹீம், டி.என்.எச்.பி. குடியிருப்பு, ராணிப்பேட்டை.

வேகத்தடை வேண்டும்

 வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் பாதையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. அதன் எதிரில் உள்ள சாலை வளைவாக உள்ளது. சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அந்த அலுவலகத்துக்கு வருவோரும், போவோரும் சிரமப்பட வேண்டி உள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும்.

  -எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.

 வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

 கலவை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஸ்கூல்தெருவில் இரு பக்கமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்தத் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் செல்ல சிரமப்படுகிறார்கள். போக்குவரத்து ெநரிசலை சீரமைக்கக்கோரி போலீசாா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -வெற்றிவேல், கலவை.

சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகள்

  அரக்கோணம் ஜோதிநகர் திருத்தணி சாலையில் சாலையோரம் குப்பைகள் வீசப்படுகிறது. அந்தக் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு கால்நடைகள் வந்து கிளறி விடுவதால், குப்பைகள் பறந்து சென்று கழிவுநீர் கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி வழிந்து சாலையில் ஓடுகிறது. அங்குள்ள குப்பைகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.

 -ராதாகிருஷ்ணன். அரக்கோணம்.

கழிவுநீர் குட்டையாக மாறிய குழாய் உடைப்பு

 வேலூர் அருகே வள்ளலார் பகுதி 1-ல் 48-வது தெரு உள்ளது. இங்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தெருவின் நடுப்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி குட்டை போல் தேங்கி நிற்கிறது. மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் கழிவுநீர் போல மாறிவிட்டது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  -மோகன்தாஸ், வேலூர்.

Next Story