பாரிமுனையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை


பாரிமுனையில் பட்டப்பகலில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 4 April 2022 7:17 PM IST (Updated: 4 April 2022 7:17 PM IST)
t-max-icont-min-icon

பாரிமுனையில் தண்ணீர் பந்தல் பணியில் ஈடுபட்ட போது, தி.மு.க. பிரமுகரை மர்மகும்பலினர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

சரமாரி வெட்டு

தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 59). இவர் சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் பழக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். அ.தி.மு.க. கட்சியில் பணியாற்றிய இவர், 4 மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்ததாக தெரிகிறது. இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பாரிமுனையில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் ஏற்பாட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தண்ணீர் பந்தல் அருகே நின்றிருந்த சவுந்தர்ராஜனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.

தனிப்படை அமைப்பு

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சவுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதன் பின்னர், கொலை குற்றவாளிகளை பிடிக்க வழக்குப்பதிவு செய்ததையடுத்து, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.

தண்ணீர் பந்தல் தகராறு

தனிப்படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அ.தி.மு.க.வில் இருந்தபோது சவுந்தரராஜன் அப்பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கமாக கொண்ட நிலையில், தற்போது தி.மு.க.வில் இணைந்ததையடுத்து, அதே பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக அவருக்கும், வேறு ஒருவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், சுவர் விளம்பரம் எழுதுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே சமரசம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது

எனவே இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது தொழில்போட்டி காரணமாக நடந்ததா? என பல்வேறு கோணத்தில் எஸ்பிளனேடு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story