பூத்துக்குலுங்கும் காபி செடிகள்
கோத்தகிரி
குஞ்சப்பனை பகுதியில் பெய்த கோடை மழை காரணமாக பூத்துக்குலுங்கும் காபி செடிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊடுபயிராக சாகுபடி
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இருப்பினும் கோத்தகிரி மற்றும் அதை சுற்றி உள்ள அரவேனு, கீழ் தட்டபள்ளம், குஞ்சப்பனை, கரிக்கயூர், செம்மனாரை உள்பட ஏராளமான ஆதிவாசி கிராம பகுதிகளில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக அராபிக்கா மற்றும் ரொபஸ்டா உள்ளிட்ட காபி செடிகளை சாகுபடி செய்து உள்ளனர்.
இந்த காபி செடிகளில் ஆண்டிற்கு 2 முறை அறுவடை செய்யலாம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு தயாரான காபி செடிகளில் இருந்த பழங்களை விவசாயிகள் அறுவடை செய்தனர்.
பூத்துக்குலுங்குகிறது
தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பினும், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்தது. இதன் காரணமாக காபி செடிகளில் மீண்டும் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இதன் காரணமாக குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள காபி செடிகளில் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து காபி சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:- கோத்தகிரி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. காபி பழங்களை மே மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்யலாம். அறுவடை காலம் தொடங்கியதும் 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்த்து உள்ள பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.
விளைச்சல் அதிகரிக்கும்
அந்த வகையில் நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்சமாக ஒருமுறைக்கு 8 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். உலர வைக்காத ஒரு கிலோ காபி பழங்கள் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
ஓரளவிற்கு உலர்ந்த காபி விதைகள் ரூ.80-க்கும், நன்கு உலர்ந்த தரமான காபி விதைகள் கிலோவுக்கு ரூ.140-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது காபி செடிகளில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளதாலும், போதுமான மழை பெய்துள்ளதாலும் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

