மாவட்டத்தில் கஞ்சா புகையிலை பொருட்கள் விற்ற 140 பேர் கைது


மாவட்டத்தில் கஞ்சா புகையிலை பொருட்கள் விற்ற 140 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 10:06 PM IST (Updated: 4 April 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கஞ்சா புகையிலை பொருட்கள் விற்ற 140 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

கடலூர்

ஆபரேஷன் கஞ்சா வேட்டை

தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீதும், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

140 பேர் கைது

அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த அதிரடி வேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிதம்பரம் பூதங்கேனியை சேர்ந்த பைசல் முகமது(வயது 24), மா.கொளக்குடியை சேர்ந்த கரப்பான் பூச்சி என்கிற பைஜி ரகுமான்(33), சந்தை தோப்பு புரூஸ்லி என்கிற ஆனந்த்(21), விருத்தாசலம் ராஜசேகர்(31), அப்துல் அகமது(23), கோட்டேரி சிவக்குமார்(26), நெடுமாறன்(25), இளையராஜா(25), வேப்பூர் தமிழரசன்(22), நெய்வேலி வட்டம்-11 வெங்கடேஷ்குமார்(29), கடலூர் குணமங்கலத்தை சேர்ந்த சூர்யா ஆகிய 11 பேரையும், புகையிலை பொருட்கள் விற்ற காட்டுமன்னார்கோவில் தில்லைநாயகபுரத்தை சேர்ந்த சுவாமிநாதன் (42), லால்பேட்டை முகமதுஅமீன்(65), சிதம்பரத்தை சேர்ந்த ஜீத்தேந்தர்(33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இதுவரை நடந்த அதிரடி வேட்டையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற 140 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8.518 கிலோ கஞ்சாவையும், 21.77 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story