தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 4 April 2022 10:23 PM IST (Updated: 4 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுன் தண்டனை விதித்து தார்வார் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது

உப்பள்ளி:

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுன் தண்டனை விதித்து தார்வார் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

 நடத்தையில் சந்தேகம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் சாளுக்கியா நகரை சேர்ந்தவர் கிஷுர் பொம்மஜி. தொழிலாளி. இவரது மனைவி லமினா(வயது 29). லமினா, ஆந்திராவை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. 
இதற்கிடையே அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு கிஷூர் அடிமையாகி உள்ளார். 

இதனால் அவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லமினாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் லமினா, ஆந்திராவில் உள்ள பெற்றோரிடம் அடிக்கடி செல்போனில் பேசுவதை தவறாக கருதி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கிஷூர், மனைவி லமினாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

 கழுத்தை இறுக்கி கொலை

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதியன்று மது அருந்தி வீட்டிற்கு வந்த கிஷுர், நடத்தையில் சந்தேகப்பட்டு லமினாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த கிஷுர், மனைவி  என்றும் பாராமல் வீட்டில் கிடந்த மின்வயரால் கழுத்தை இறுக்கி லமினாவை கொலை செய்தார். 

இதைதொடர்ந்து மனைவி லமினா தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். கேஷ்வாப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் கிஷுர், மனைவி லமினாவை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை தார்வார் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தேவேந்திரப்பா தீர்ப்பு கூறினார். 

அதில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். 

Next Story