பெண்ணிடம் 12½ பவுன் சங்கிலி வழிப்பறி; 4 பேர் கைது


பெண்ணிடம் 12½ பவுன் சங்கிலி வழிப்பறி; 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 12:30 AM IST (Updated: 4 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கணவரை தாக்கி பெண்ணிடம் 12½ பவுன் சங்கிலியை கொள்ளையடித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்:-

திருவாரூர் அருகே கணவரை தாக்கி பெண்ணிடம் 12½ பவுன் சங்கிலியை கொள்ளையடித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

வழிப்பறி

திருவாரூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகலா (வயது49). இவர் திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள தையல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் வீரராகவன் (56). கட்டுமான பொறியாளர். கடந்த 2-ந் தேதி இரவு திருவாரூரில் தையல் கடையை பூட்டிவிட்டு வீரராகவன், மேகலா ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் கருப்பூரில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். 
அலிவலம் அருகே சென்றபோது முகமூடி அணிந்து வழிமறித்த கும்பல் வீரராகவனை இரும்பு கம்பியால் தாக்கி, மேகலா அணிந்திருந்த 12½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். 

தனிப்படை போலீசார்

இதில் பலத்த காயம் அடைந்த வீரராகவன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருவாரூர் பழையவலம் பகுதியை சேர்ந்த நிவாஸ் (36), அறிவழகன் (21), கொரடாச்சேரி திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (24), திருவாரூர் ஓடாச்சேரியை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகிய 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

சங்கிலி பறிமுதல்

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 12½ பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர். 
கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

Next Story