வாணியம்பாடியில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


வாணியம்பாடியில்  மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 April 2022 10:49 PM IST (Updated: 4 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

சாராய கும்பலை கைது செய்தாததால் வாணியம்பாடியில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வாணியம்பாடி

சாராய கும்பலை கைது செய்தாததால் வாணியம்பாடியில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

தொடர் சாராயம் விற்பனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜ் நகர், லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் போலீஸ் நிலையம் முதல் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு வரை 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி கிராம மக்கள் சாலையில் கொட்டி,மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாராயம் விற்பனை நடந்த கொட்டகைக்கும் தீ வைத்தனர்.

தொடர்ந்து சாராயம் விற்கும் கும்பலை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சாராய கும்பலின் தலைவியாக செயல்படும் மகேஸ்வரி என்ற பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காமராஜ் நகர் பகுதியில் மகேஸ்வரிக்கு சொந்தமான வீட்டில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

30 மூட்டை சாராயம் 

அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் கிராமப்பொது மக்கள் ஒன்று சேர்ந்து சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட சாராய முட்டைகளை கிராம மக்கள் கைப்பற்றி உயரதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை எடுத்துசெல்ல முயன்றனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கிய குற்றவாளியை கைது செய்யாததால்தான் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாகக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

பின்னர் சாராயம் விற்றுக்கொண்டிருந்த சதீஷ் குமார் என்ற இளைஞரை விரட்டிச் சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சாராய விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் பெண்ணை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த வீட்டிலிருந்து சாராய மூட்டைகளை போலீசார் எடுத்துச் செல்லக்கூடாது என அந்த பகுதியில் முற்றுகையிட்டு இருந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கட்டத்தில் சாராய பாக்கெட்டுகளை ஆட்டோ மூலம் ஏற்றிச்செல்ல முயன்றனர். ஆனால் இளைஞர்கள் ஆட்டோவை போக விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்தி ஆட்டோவில் சாராயத்தை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். 

சாராய கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்கு சம்பந்தப்பட்ட போலீசார் இல்லாததால், அங்கு வந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.
1 More update

Next Story