சேலம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கடத்திய 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்:-
சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கடத்திய 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்களில் சோதனை
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போதைப்பொருளான கஞ்சா கடத்துவதை தடுப்பதற்காகவும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து நேற்று கேரளாவுக்கு சென்ற தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-13351), ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் முதற்கொண்டு சேலம் ரெயில் நிலையம் வரை ரெயில்வே போலீசார் ராமன், கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார், கவியரசு ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
18 கிலோ கஞ்சா
அப்போது எஸ்-4 பெட்டியில் சோதனை செய்தபோது ஒருவர் சந்தேகப்படும் படியாக அமர்ந்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த கைப்பையையும் சோதனை செய்தனர். இதில் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவ் சங்கர் பகன் (வயது 40) என்பதும், இவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்காடு என்ற ஊரில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த ரெயில்வே போலீசார், அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த கஞ்சா கடத்தல் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story