170 வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ்
திருப்பூர், மேற்குபதியில் 170 வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்
திருப்பூர், மேற்குபதியில் 170 வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் பாளையக்காடு, சேர்மன் கந்தசாமி நகர், ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர்கள் 34-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 80 குடும்பத்தினர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள், 60 குடும்பத்தினர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் இணைப்பு அனைத்தும் பெற்றுள்ளோம்.
கூலி வேலை செய்தும், பனியன் நிறுவனங்களில் வேலை செய்தும் வருகிறோம். இந்தநிலையில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணரை வாய்க்காலில் வீடுகள் கட்டி அனுமதியின்றி குடியிருந்து வருவதாக கூறி, 21 நாட்களில் வீடுகளை உடனடியாக காலி செய்யும்படி கடந்த 2-ந் தேதி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். எங்களால் வேறு இடம் வாங்கி வீடுகள் கட்ட முடியாது. எங்களுக்கு குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியும், அனைவருக்கும் அரசு சார்பில் இடம் வழங்கியும், அங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
மேற்குபதி
அவினாசி தாலுகா மேற்குபதி கொன்னங்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கடந்த 20 ஆண்டுகளாக 26 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். இதில் 18 வீடுகள் வீட்டுவசதி துறையின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டது. வீடுகளுக்கு மின்சாரவசதி, குடிநீர் வசதி உள்ளது. இந்தநிலையில் புறம்போக்கில் குடியிருக்கும் எங்கள் வீட்டை 15 நாட்களில் காலி செய்யுமாறு மேற்குபதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் வழங்கி உதவ வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுவில், ‘மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும்உபகரணங்கள் பழுது ஏற்பட்டால் அவற்றை இலவசமாக பழுது பார்க்க மாவட்டத்தில் பழுது நீக்கும் மையம் அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
ஆக்கிரமிப்பு
கணபதிபாளையம்பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து குடிசை அமைத்து வாழ தொடங்கியுள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வங்கி பஸ் ஸ்டாப் முதல் பி.ஏ.பி. குடியிருப்பு பகுதி வரை சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு சந்திராபுரம்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் அளித்த மனுவில், ‘அம்மா உணவகம் எதிரில் பெரிய வாகை மரம் இருந்தது. கடந்த 1-ந் தேதி மின்வாரிய ஊழியர்கள் அந்த மரத்தில் கிளைகளை அகற்றினார்கள். ஆனால் அன்று இரவு மர்ம ஆசாமிகள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து மரத்தை முழுவதுமாக பிடுங்கி எறிந்து விட்டனர். 1,000 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியையும் சேதப்படுத்தியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இலவச வீட்டுமனைப்பட்டா
பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா 35 பேருக்கு வழங்கியுள்ளனர். ஆனால் இதில் தகுதியானவர்களை தேர்வு செய்யாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே முறையாக விசாரணை நடத்தி பயனாளிகளை தேர்வு செய்து பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story