பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு பாட புத்தகத்தில் பெண்கள் குறித்த இழிவான கருத்தை நீக்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு, பிரியங்கா சதுர்வேதி கடிதம்
பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாட புத்தகத்தில் உள்ள பெண்கள் குறித்த இழிவான கருத்தை நீக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, பிரியங்கா சதுர்வேதி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
மும்பை,
பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாட புத்தகத்தில் உள்ள பெண்கள் குறித்த இழிவான கருத்தை நீக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, பிரியங்கா சதுர்வேதி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
வரதட்சணையின் நன்மைகள்
சிவசேனா கட்சியின் மாநிலங்களை எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பி.எஸ்.சி. 2-ம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களில் ஒன்றான செவிலியர் சமூகவியல் பாடப்புத்தகத்தில் வரதட்சணையின் தகுதிகள் மற்றும் நன்மைகள் என்ற பாடம் இடம் பெற்றுள்ளது.
மறைமுக நன்மை
இதில் வரதட்சணையின் சுமை காரணமாக பல பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். பெண்கள் நன்கு படித்து வேலைக்கு சென்றால், அவர்களுக்கு கொடுக்கவேண்டிய வரதட்சணை தேவை குறையும். இது ஒரு மறைமுக நன்மை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் அசிங்கமான பெண்கள் கூட அதிக வரதட்சணை கொடுத்து நல்ல ஆணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்பது போன்ற இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளது.
அரசியலமைப்புக்கு அவமானம்
இதுபோன்ற இழிவான கருத்துக்கள் புத்தகத்தில் இருப்பது திகைப்பாக உள்ளது. வரதட்சணையின் சிறப்பை விவரிக்கும் பாட திட்டம் உண்மையில் நமது தேசத்திற்கும், அரசியலமைப்புக்கும் அவமானம்.
வரதட்சணை ஒரு கிரிமினல் குற்ற செயலாக இருக்கும் நிலையில் இதுபோன்ற காலாவதியான கருத்துகள் நிலவி வருவது துரதிர்ஷ்டவசமானது. இதை படிக்கும் மாணவர்களும் இதுபோன்ற பிற்போக்குதனங்களுக்கு ஆளாக நேரிடும்.
இந்த புத்தகத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது.
இதுபோன்ற பிற்போக்குதனமான புத்தகங்களை புழக்கத்தில் இருந்து உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான உள்ளடக்கங்கள் கற்பிக்கப்படவோ அல்லது ஊக்குவிக்கப்படவோ கூடாது என்பதை உறுதிபடுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story