120 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்


120 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 4 April 2022 11:33 PM IST (Updated: 4 April 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

மங்கலம்
திருப்பூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 120 வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
பொதுமக்களுக்கு நோட்டீசு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா சாமளாபுரம் பேரூராட்சி பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் வசிக்கும் குடியிருப்புகளை ஒட்டி நீராதார குளம் உள்ளதால் அங்குள்ளவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டது.
பல தரப்பட்ட போராட்டம்
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாங்கள் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரியும் சாமளாபுரம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் 120 குடும்பத்தினர் கடந்த மாதம் மார்ச்் 1-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம், தொடர் உள்ளிருப்புப் போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரிடம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதி பொதுமக்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். 
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
இந்த நிலையில் நீர் ஆதாரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அங்குள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற வருவாய்த்துறையினர் நேற்று காலை நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அங்கு பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் திருப்பூர் ஆர்.டி.ஓ. முருகதேவி, பல்லடம் தாசில்தார் நந்தகோபாலன், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார், சாமளாபுரம் நில உரிமை பாதுகாப்பு இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாற்று இடம்
அப்போது சாமளாபுரம் அருகே உள்ள செந்தேவிபாளையம் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாற்று இடம் வழங்குவதாக வருவாய்த்துறையினர் உறுதி அளித்தனர். அதன் பின்னர் திருப்பூர் ஆர்.டி.ஓ. முருகதேவி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சாமளாபுரம் குளம் அருகே கட்டப்பட்டிருந்த வீடுகளை எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. மொத்தம் 120 வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். தாங்கள் இத்தனை காலம் குடியிருந்த வீடுகள் அகற்றப்படுவதை பார்த்து பொதுமக்கள் கண்ணீர் வடித்தனர்.
இந்த நிலையில் சாமளாபுரம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் குடியிருந்த 88 பேருக்கு சாமளாபுரம் அருகே உள்ள செந்தேவிபாளையம் பகுதியில் ஒரு குடும்பத்துக்கு தலா 1.20 சென்ட் இடம் வழங்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்திற்கான டோக்கனும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, அங்கு வசித்து வந்த பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்து பொருட்களை தாங்களாகவே எடுத்துக்கொண்டு வந்து சரக்கு வாகனம் மூலம் கொண்டுச் சென்றனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சாமளாபுரம் நிலஉரிமை மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் கூறுகையில் "சாமளாபுரம் நீராதார குளம் அருகே கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய்துறையினர் இடித்து அகற்றியதால், பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் வசித்த 120 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். வருவாய்த்துறையினர் செந்தேவிபாளையத்தில் 88 பேருக்கு  தலா 1.20 செண்ட் இடம் வழங்கியுள்ளனர் . 
இன்று (நேற்று) பட்டத்தரசியம்மன் கோவில் வளாகத்தில் தான் தூங்குகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உணவு, குடிநீர், குடியிருப்பு அமைக்க சிறப்பு ஊக்கத்தொகை ரூ.50,000 மற்றும் குடியிருப்பு அமைக்கும் வரை பொது சமுதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Next Story