முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம்  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 5 April 2022 12:26 AM IST (Updated: 5 April 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஓணாங்குடி, இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் ேகாவில்களில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ேதரை வடம் பிடித்து இழுத்தனர்.

அரிமளம்:
முத்துமாரியம்மன் கோவில்
அரிமளம் ஒன்றியம், ஓணாங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா கடந்த மார்ச் 20-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பங்குனி  திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகப்படி நடைபெற்றது. தினமும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 3-ந் தேதி பொங்கல் விழாவும் அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டமும் நடைபெற்றது. 
தேரோட்டம்
முத்துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அப்போது  ஊர் அம்பலம், நகரத்தார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் தேரை முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் இழுத்து வந்தனர். அப்போது பொதுமக்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் ேகாவில் நிலையை வந்தடைந்தது. 
திருவிழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காப்பு களைதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊரார்கள், அம்பலகாரர்கள், நகரத்தார்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர். 
இலுப்பூர் 
இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி தேரோட்டம் கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலையிலும்  முத்துமாரியம்மன் வீதி உலா நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்குடம் ஊர்வலமும், தீச்சட்டி ஏந்திச்செல்லுதல், அலகு நேச்சை, தொட்டில் கட்டுதல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மனை தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை அடைந்தது. இதில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

Next Story