ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்.
பங்குனி பொங்கல் விழா
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அக்னி சட்டி எடுக்கும் திருவிழா நடந்தது.
இவ்விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். மஞ்சள் ஆடை உடுத்தி அக்னி சட்டி எடுத்து வந்த நிலையில் நகரின் பிரதான வீதிகள் மஞ்சள் நிறமாக மாறிய காட்சியை காண முடிந்தது.
பறவைக்காவடி
நகரின் அனைத்து வீதிகளும் மாரியம்மன் கோவிலை நோக்கி செல்வது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. பக்தி கோஷத்துடன் ஆண்களும், பெண்களும் மஞ்சள் ஆடை உடுத்தி பக்தி பரவசத்துடன் அக்னி சட்டி எடுத்துசென்ற காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். தம்பதியர் பலர் தங்கள் குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் இட்டு முக்கிய வீதிகளை சுற்றி வந்து தங்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மாரியம்மனும், வெயிலுகந்தம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிறப்பு பஸ்கள்
விழாவைெயாட்டி தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டியும் அக்னிச்சட்டி விழாவையொட்டியும் நகர் முழுவதும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் போலீசார் உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
போக்குவரத்து கழகத்தினரும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விருதுநகருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
Related Tags :
Next Story