சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்
விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெலட்டூர்;
விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலை பணிகள்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வையச்சேரி, சூலமங்களம் ஊராட்சி பகுதியில் தஞ்சை- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வையச்சேரி பகுதியில் உள்ள கிராம சாலைக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இது நாள் வரை சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராம மக்கள் நேற்று காலை வையச்சேரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சத்தியாசுர்ஜித், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் குணசேகரன், அ.ம.மு.க.வை சேர்ந்த அசோக், தி.மு.க. பிரதிநிதிகள் உமேந்திரன், அய்யாகண்ணு உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் சர்வீஸ் சாலை அமைக்க மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், கிராம நிர்வாக அதிகாரி ரவிக்குமார் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பணிகள் பாதிப்பு
இதன்பேரில் கிராமமக்கள் கோரிக்கையை கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண்பது, வருகிற 7- ந்தேதி (வியாழக்கிழமை) பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் வையச்சேரி, சூலமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டம் காரணமாக விக்கிரவாண்டி- தஞ்சை நெடுஞ்சாலை பணிகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story