மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 1:44 AM IST (Updated: 5 April 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்;
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மனித மண்டை ஓடுகளை கழுத்தில் போட்டு கொண்டும், எலும்புகளை கையில் ஏந்தியும் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் குருநாதன், மாநில செயலாளர் மகேந்திரன், துணைப் பொதுச் செயலாளர் தங்கமுத்து, மாநில செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிலுவைத் தொகை
ஆற்றில் மணல் எடுப்பதையும், குவாரிகள் அமைப்பதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும். சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், இதர பயிர்களுக்கு அறிவித்த தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
பொதுமக்கள் அவதி
இதில் மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் மதியழகன், பொருளாளர் சந்திரகாசன் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் உள்பட தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் கோரிக்கை மனுக்களுடன் வந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Next Story