பவானிசாகரில் வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


பவானிசாகரில் வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 5 April 2022 1:49 AM IST (Updated: 5 April 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகரில் வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பவானிசாகரில் வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கூடுதல் கட்டணம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
தமிழக     வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் ஜெ.கோபு தலைமையில் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டது. மேலும், சிலிண்டர் கொண்டு வரும் ஊழியருக்கு கூடுதலாக ரூ.50 வரை வாடிக்கையாளர்கள் வழங்க வேண்டியுள்ளது. ஒரு கியாஸ் சிலிண்டர் ரசீதில் வினியோகம் செய்வதற்கான தொகையும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்களிடம் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகஸ்தர்கள் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
வீடுகள் அகற்றம்
பவானிசாகர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
பவானிசாகர் அணை பூங்காவுக்கு எதிர் பகுதியில் அண்ணாநகர் உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் முறையாக வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்தநிலையில் எங்கள் குடியிருப்புகளை நீர்நிலை புறம்போக்கு என அறிவித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை ஆற்று நீரால் எங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எனவே எங்கள் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிட்டு நாங்கள் அங்கேயே வசிக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர் கடவு பகுதியில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சிலர் கொடுத்த கோரிக்கை மனுவில், “பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த எங்களை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த 2006-ம் ஆண்டு ஆலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதுதொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதில் ஆலை நிர்வாகம் இழப்பீட்டு தொகையை வழங்குவதுடன் வேலையையும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே அந்த தொகையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
பணம் பறிப்பு
தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
மாடுகளை பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து டிரைவர்களிடம் ஒரு அமைப்பினர் பணம் பறித்து வருகிறார்கள். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், மத ரீதியாக பேசி பிரச்சினையை திசை மாற்றி விடுகிறார்கள். பெருந்துறை நெடுஞ்சாலையில் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயாளர் விடியல் எஸ்.சேகர் கொடுத்த மனுவில், “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றி பெற்றதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீட்டு வரி, சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. உடனே சொத்து வரி உயர்வை திரும்ப பெற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்”, என்று கூறி இருந்தார்.
நலத்திட்ட உதவிகள்
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 254 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பேச்சு ஆற்றலை வளர்க்கும் வகையில் ஐ.ஐ.டி. கல்லூரி மாணவர்களாக உருவாக்கப்பட்ட டேப், 8 சிறப்பு பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் என 68 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story