தினத்தந்தி புகாா் பெட்டி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி
சுகாதாரக்கேடு
கோபி காந்திநகர் பகுதியில் இருந்து தனியார் பள்ளிக்கூடம் செல்லும் சாலையில் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. மேலும் அந்த குப்பையில் மதுபாட்டில்களும் கிடக்கின்றன. குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பழுதடைந்த குடிநீர் தொட்டி
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மேலும் குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அந்த குடிநீர் தொட்டியில் உள்ள தூண்கள் மற்றும் மேல் பகுதியில் உள்ள காரைகள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். அல்லது புதிதாக குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுவராஜா, செம்புளிச்சாம்பாளையம்.
வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?
கோபி திருமலை நகரில் உள்ள கிருஷ்ணன் வீதியில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த ரோட்டில் இரவு நேரங்களில் செல்பவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். எனவே வேகத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
ரோட்டை சீரமைக்க வேண்டும்
பெருந்துறை அருகே உள்ள பெரியவிளாமலை கிராமத்தில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர் சாலையை சரிவர மூடப்படவில்லை. குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப் படுகிறார்கள். மேலும் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரியவிளாமலை.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபி அக்ரகாரம் கிருஷ்ணன் வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே காய்ந்துபோன செடி, கொடிகள், தென்னை இலைகள், மட்டைகள் குப்பை போல் குவிந்து கிடக்கிறது. காய்ந்து கிடக்கும் குப்பையில் யாராவது தீ வைத்துவிட்டால் பெரும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
சாக்கடையை தூர்வார வேண்டும்
அந்தியூர் தவுட்டுபாளையத்தில் உள்ள சத்தி ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் அருகே உள்ள சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் போக வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாக்கடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
-----------------
Related Tags :
Next Story