குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 5 April 2022 2:58 AM IST (Updated: 5 April 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்:

குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களம் கிராமம் புதிய ஒட்ட தெருவை சேர்ந்த பொதுமக்கள் தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர் அண்ணாமலை தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில், தெரு குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த எங்கள் பகுதியில் ஒரு ஆண்டுக்கு முன்பு சிமெண்டு சாலை போடுவதற்காக குழாய்கள் மூடப்பட்டது. மீண்டும் தெரு குழாய்கள் அமைக்கப்படாததால் தற்போது வரை போதிய குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேவையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறியிருந்தனர்.
குன்னம் தாலுகா, நன்னை கிராம மக்கள் சார்பில் தங்கராசுவின் மனைவி நல்லம்மாள் என்ற மூதாட்டி, கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கிராமத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற...
தற்போது மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் நன்னை கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், என்று கூறியிருந்தார். மேலும் அவர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த முறை கலெக்டர் அலுவலகத்தில் வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன். வேறு வழியில்லை, என்று புலம்பியபடி சென்றார்.
வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பொதுமக்கள், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரும், சமூக ஆர்வலருமான குருசாமி தலைமையில் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தற்போது நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓட்டு வீடுகளில் ஓடுகளை பிரித்து குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து சமைத்து வைத்திருக்கின்ற உணவுகளை தூக்கி செல்கிறது. எனவே வனத்துறை மூலம் எங்கள் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
259 மனுக்கள்
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 259 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Related Tags :
Next Story