மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு புதிய பஸ் வசதி


மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு புதிய பஸ் வசதி
x
தினத்தந்தி 5 April 2022 3:25 AM IST (Updated: 5 April 2022 3:25 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு புதிய பஸ் வசதியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு புதிய பஸ் வசதியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
புதிய பஸ் சேவை
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகில் உள்ள மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. நிறுவனம் வரையில் புதிய பஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு புதிய பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து நாகர்கோவில் கோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் உள்ளதா? என்பது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
கடந்த 10 ஆண்டுகளில் பல பஸ் வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. பல்வேறு வழிதடங்களில் இயங்காமல் இருந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பொதுமக்கள் மற்றும் மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ நிறுவனம் வரை பஸ்கள் இயக்கப்படுகிறது.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். அதன் அடிப்படயில் இந்த நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அறிவிக்க இருக்கிறோம். அதற்காக பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் ஜவகர், மாநகராட்சி கவுன்சிலர் கலா ராணி, நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அரவிந்த், துணை மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன் (வணிகம்), ஜெரோலின் (இயக்கம்), மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story