200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; கடைக்கு ‘சீல்'


200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; கடைக்கு ‘சீல்
x
தினத்தந்தி 5 April 2022 4:28 AM IST (Updated: 5 April 2022 4:28 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. மற்றொரு கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. மற்றொரு கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
குமரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் மகேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் கோட்டார் பகுதியில் உள்ள கடை ஒன்றில் அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கடையில் இருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இந்த கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதாக 2 முறை அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது முதல் முறை ரூ.50 ஆயிரமும், 2-வது முறை ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தன.
கடைக்கு சீல்-அபராதம்
இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி லோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கடையை பூட்டி ‘சீல்' வைத்தனர்.
கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல கோட்டார் பகுதியில் மேலும் ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் இருந்த 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story