கிணறுகளில் கற்கள் அள்ளுவதற்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
தென்காசி மாவட்டத்தில் கிணறுகளில் கற்கள் அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு பொதுமக்கள் 385 மனுக்களை வழங்கினர். அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில், கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில், ‘‘தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிணறுகளிலும் கற்கள் அள்ளப்படாமல் உள்ளது. இதுகுறித்து கனிம வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கிணற்றில் கற்களை அள்ளுவதற்கு அனுமதி வழங்க தாசில்தார்களுக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
கடையநல்லூர் தாலுகா பொய்கையை அடுத்த திரிபுரசுந்தரபுரம் இந்து முன்னணி நிர்வாகி கார்த்திகேயன் வழங்கிய மனுவில், ‘‘எங்களது பகுதியில் மதமாற்றம் செய்ய பிரசாரம் செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என்று தெரிவித்து இருந்தார். குத்துக்கல்வலசை இந்து முன்னணி கிளை தலைவர் குமரேசன் கொடுத்துள்ள மனுவில், ‘‘முறையான அனுமதி இல்லாமல் வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தார்.
Related Tags :
Next Story