திண்டுக்கல்லில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மூதாட்டி பலி
திண்டுக்கல்லில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
சுட்டெரிக்கும் வெயில்
திண்டுக்கல்லில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே தினமும் 100 டிகிரி வெப்பநிலையை தாண்டி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பகல் வேளையில் அனல்காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிடைந்து வருகின்றனர்.
பெரும்பாலான பொதுமக்கள் தற்போது பகல் நேரங்களில் வீ்ட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பகல் வேளையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கொளுத்தும் வெயிலால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிக வெப்பத்தால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்படுகிறது.
மூதாட்டி பலி
இந்தநிலையில் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே நேற்று நண்பகல் வேளையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மூதாட்டி திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூதாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் அந்த மூதாட்டி யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து பாலகிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி செல்வம், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக என்.ஜி.ஓ. காலனி பகுதிக்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
வெயிலின் கொடுமை தாங்காமல் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
----------
Related Tags :
Next Story